search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் பற்றாக்குறை"

    • சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருவதால் குடிநீர் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
    • ஆலோசனையில் 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் குறைந்து கொண்டே வந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருவதால் குடிநீர் பயன்பாடு அதிகரித்து உள்ளது. வீடுகளுக்கு குழாய் மூலமும் லாரிகள் வழியாகவும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. குழாய் மூலம் தண்ணீர் கொடுக்க முடியாத பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டு சென்று நிரப்பி வருகிறது.

    இந்நிலையில் கோடை கால குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது தொடர்பாக தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் இன்று தலைமைச்செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது. ஆலோசனையில் 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

    கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்து தடையின்றி குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

    • நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டது.

    கார்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்திய 22 குடும்பங்களுக்கு பெங்களூரு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

    பெங்களூருவில் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற குடிநீர் வாரியத்தின் உத்தரவை மீறும் ஒவ்வொரு குடும்பமும் ரூ.5,000 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) 22 வீடுகளிடம் இருந்து ரூ. 1.1 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது.

    இதைத்தவிர, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டது.

    இந்த மாத தொடக்கத்தில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் குடிநீர் பற்றாக்குறை நெருக்கடியை மனதில் வைத்து, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பரிந்துரைத்தது. வாகனங்களை கழுவுதல், கட்டுமானம் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொது மக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

    மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்கள், ஒவ்வொரு முறையும் உத்தரவை மீறும்போது கூடுதலாக ரூ.500 அபராதம் விதிக்க வாரியம் முடிவு செய்துள்ளது.

    கடுமையான தண்ணீர் பற்றாக்குறை பெங்களூருவை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. நகரவாசிகள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரு முறை பயன்படுத்தும் தட்டில் சாப்பிடுவதும், மால்களில் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதும் போன்ற நெருக்கடியில் இருந்த வருகின்றனர்.

    • குடிநீர் சுத்தகரிப்பு இல்லாமல் இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
    • சின்டெக்ஸ் டேங்குகள் மூடிகள் உடைந்து இருப்பதால் நீர் அசுத்தம் அடைகிறது.

    தருமபுரி,

    தருமபுரி திருப்பத்தூர் சாலையில் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    தனியார் பள்ளிக்கு நிகராக அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளதால் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவிகள் இந்த பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர். 6- ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை புதிய கட்டிடத்திலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் பழைய கட்டிடத்திலும் இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் 11-ம் வகுப்பில் 540 மாணவிகளும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 230 மாணவிகளும் புதியதாக சேர்ந்துள்ளனர். பள்ளியில் தற்பொழுது 3364 மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் சுத்தகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட 3 சுத்திகரிப்பு எந்திரங்கள் உள்ளன. அவை தற்போது பழுதாகி ஓரம் கட்டப்பட்டுள்ளது.

    தற்போது பள்ளி திறந்த நிலையில் மாணவிகளுக்கு நகராட்சி சார்பில் 750 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 சின்டெக்ஸ் டேங்குகளில் சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 1500 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.

    சின்டெக்ஸ் டேங்குகள் 2 மேல் மூடிகள் உடைந்து இருப்பதால் குடி தண்ணீரில் பூச்சிகள், இலைகளின் சருகுகள் என குப்பைகள் கலந்து அசுத்தமாக இருக்கிறது. மேலும் 3500-க்கும் மேல் படிக்கும் மாணவிகளுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை 1500 லிட்டர் தண்ணீரை நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. ஒரு நாளைக்கே 1500 லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. நகராட்சி வழங்கும் குடிதண்ணீர் சுத்தகரிப்பு இல்லாமல் இருப்பதால் மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    பள்ளி திறப்பதற்கு முன்பே மாணவிகளுக்கு அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி, சுத்தகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்யாமல் மெத்தன போக்குடன் பள்ளி கல்வி நிர்வாகம் இருப்பது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பள்ளிக்கல்வித்துறை மாணவிகள் விஷயத்தில் மெத்தன போக்குடன் இல்லாமல் உடனடியாக சுத்தகரிக்கப்பட்ட குடிநீரை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அம்ரூத் திட்டத்தில் 4வது குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • குடிநீர் திட்டத்தில் நீர் ஆதாரம் குறைய வாய்ப்பில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில், ஏறத்தாழ 12 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 2லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், பல்லாயிரம் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளன.முதல் குடிநீர் திட்டம் மூலம் தினமும் 55 லட்சம் லிட்டர் குடிநீர் பெற 1965ம் ஆண்டும், 2வது திட்டம் மூலம் 3 கோடி லிட்டர் குடிநீர் பெற 1993ம் ஆண்டிலும் திட்டமிடப்பட்டது.

    இத்திட்டங்களுக்கு மேட்டுப்பாளையம், பவானி ஆற்றில் இருந்து குடிநீர் பெறப்படுகிறது. புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் 3வது குடிநீர் திட்டத்தில் தினமும் 10 கோடி லிட்டர் அளவும் குடிநீர் பெறப்படுகிறது. இது பெரும்பாலும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது முதல் மற்றும் 2வது குடிநீர் திட்டங்களில் குடிநீர் குறைந்துள்ள நிலையில், வீட்டு இணைப்புகளுக்கு இதன் மூலம் தற்போது பெருமளவு குடிநீர் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது அம்ரூத் திட்டத்தில் 4வது குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் இது பயன்பாட்டுக்கு துவங்கும் வகையில் வெள்ளோட்டம் நடந்தது.இதன் மூலம் தற்போது வடக்கு பகுதியில் முதல் கட்டமாக 12 மேல் நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. விரைவில் இத்திட்டத்தில் கட்டடப்பட்டு வரும் மீதமுள்ள தொட்டிகளுக்கும் நீர் ஏற்றி வினியோகம் துவங்கப்படும்.

    இப்பணி காரணமாக கடந்த இரண்டாண்டு காலமாக முழுமையாகவே முதலாவது குடிநீர் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. வீடு, வணிக மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு பகுதி வாரியாக ஒரு வாரம் முதல் 10 நாள் இடைவெளியிலும், சில பகுதிகளில் 12 முதல் 14 நாள் என்ற கணக்கிலும் குடிநீர் வழங்கப்படுகிறது.

    இந்த நிலை கோடைக்காலம் துவங்கினால் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என பொதுமக்கள் கருதுகின்றனர். பல பகுதிகளில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு பெருமளவு குடிநீர் வீணாகிறது. இதனால் குடிநீர் வினியோகத்தில் சிரமம் நிலவுகிறது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- தற்போது 2 மற்றும் 3வது குடிநீர் திட்டத்தில் தேவையான அளவு குடிநீர் வழங்கப்படுகிறது. இது தவிர மாநகராட்சி அமைத்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ் குழாய் கிணறுகள் மூலம் உரிய பகுதிகளில் தண்ணீர் சப்ளையாகிறது. மேலும் இதற்கான தேவை உள்ள பகுதிகள் ஆய்வு செய்து புதிய ஆழ்குழாய் கிணறுகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

    முடிந்த வரை குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் குடிநீர் சப்ளை திட்டமிட்டு வழங்கப்படுகிறது. இரண்டாவது குடிநீர் திட்டத்தில் 3 கோடி லிட்டருக்கு பதிலாக 2 கோடி லிட்டர் அளவு மட்டுமே குடிநீர் வருகிறது. இருப்பினும் மூன்றாவது திட்டத்தில் குடிநீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் இதை எதிர்கொள்ள முடிகிறது.பணிகளால் சில இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு சப்ளையில் இடைவெளி ஏற்படுகிறது.

    இதை உடனுக்குடன் சரி செய்து வருகிறோம். பராமரிப்பு பணிகளால் நீரேற்றும் மையங்களில் தடை ஏற்பட்டாலும் அதை சரி செய்யும் விதமாக திட்டமிட்டு சப்ளை செய்யப்படுகிறது.

    ஆழ்குழாய் கிணறுகள் மூலமும் ஓரளவு தண்ணீர் தேவை பூர்த்தியாகிறது. குடிநீர் திட்டப்பகுதியில் தற்போது நீராதாரம் தேவையான அளவு உள்ளதால் கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.

    மேலும் தற்போது நீர் உறிஞ்சும் பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏறத்தாழ 25 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்படும் போது, நீர் ஆதாரம் குறையாமல் இருக்கும். இதன் மூலம் குடிநீர் திட்டத்தில் நீர் ஆதாரம் குறைய வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ராமநாதபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
    • குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுப்பதாக கூட்டத்தில் நகர் மன்றத்தலைவர் உறுதியளித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 90 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டன.

    நகரில் குடிநீர், தெரு விளக்கு, பாதாள சாக்கடை பிரச்சினை உள்ளது. துப்புரவு பணியாளர்கள் சரிவர பணி செய்யாததால் நகரில் குப்பைகள் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிமாகி வருகிறது.

    நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் கவுன்சி லர்கள், பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை கண்டு கொள்வதில்லை. நகராட்சி யில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியில் உள்ள அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு குற்றச்சாட்டு களை கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

    நகர்மன்ற தலைவர் கார்மேகம் பதிலளித்து பேசுகையில், விரைவில் பாதாள சாக்கடை பிரச்சினை சரிசெய்யப்படும். நகர் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்படும்.

    நகரில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய பஸ்நிலையம் இடிக்கப் பட்டு புதிதாக கட்டப்பட உள்ளது.

    இங்கு கூடுதலாக கடைகள், பார்க்கிங் வசதி அமைக்கப்படும். துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ரூ.2 கோடி செலவில் நகர் முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கவும், ரூ.8.7 கோடி செலவில் வாறுகால் அமைப்பதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது, என்றார்.

    • நாமகிரிப்பேட்டையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
    • குடிநீர் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செய்ய பொறியாளர் உதவி பொறியாளர் மற்றும் திட்ட உதவி பொறியாளர் ஆகியோருடன் பேரூராட்சி தலைவர் சேரன், துணை தலைவர் அன்பழகன், பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஆய்வு கூட்டம் நடத்தினர்.

    ஆய்வுக் கூட்டத்தில் பேரூராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் அளவினை உயர்த்தி வழங்க கோரியும், குடிநீர் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்யக் கோரியும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் 1 கி.மீ. தூரம் நடந்து அதிக ஆழம் கொண்ட கிணற்றில் இறங்கி தண்ணீர் எடுக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Watercrisis
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் டிண்டோரி மாவட்டத்தில் உள்ள ஷாபூரா கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கிராம மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குழந்தைகள் மற்றும் பெண்கள் அன்றாட தேவைக்காக 1 கி.மீ. தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். அங்குள்ள கிணற்றில் நீரானது அடிமட்டத்தில் உள்ளது. அதனை வாளி மூலம் இறைக்க முடியாததால் பெண்கள் படிக்கட்டுகள் இல்லாத கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் இறைத்தனர்.

     
    இதையடுத்து பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக அக்கிராமத்திற்கு தினமும் 2 லாரி தண்ணீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் பெண்கள் ஆபத்தான கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் இறைக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Watercrisis
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது குடிநீர் பற்றாக்குறையால் தவித்த மாணவர்களிடம் பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார். #BangladeshBhavan #SantiNiketan #PMModi
    கொல்கத்தா:

    வங்காளதேச விடுதலைப் போரின்போது இந்தியா, வங்காளதேசம் தொடர்புடைய வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை பிரதிபலிக்கும் வகையிலும் மிகப்பெரிய அரங்கம் அமைப்பதற்காக, பிர்பம் மாவட்டம் சாந்தி நிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 35,000 சதுர அடி நிலத்தை மேற்கு வங்காளம் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    அந்த இடத்தில் 25 கோடி ரூபாய் செலவில் வங்காளதேச பவன் என்ற பெயரில் புதிய அரங்கம் ஒன்றை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்திய பிரதமர் மோடி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகிய இருவரும் வங்காளதேச பவனை திறந்து வைத்தனர். விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார்.

    இந்நிகழ்ச்சியின் போது விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர்,

    நான் பட்டமளிப்பு விழா அரங்கத்தின் உள்ளே வரும் போது சில மாணவர்கள் குடிநீர் இல்லை என என்னிடம் புகார் அளித்தனர். பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாணவர்களுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனைக்கு நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

    என பிரதமர் மோடி கூறினார். #BangladeshBhavan #SantiNiketan #PMModi
    ×